
தொடர்ந்து மூன்றாவது வாரமாக இந்த வார தொடக்கத்திலும் இந்தியப் பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்திருக்கின்றன. ஏப்ரல் 5-ஆம் தேதி அதிகபட்சமாக 1450 புள்ளிகள் அளவுக்கு சென்செக்ஸ் சரிந்தது. அதேபோல ஏப்ரல் 12-ஆம் தேதி 1480 புள்ளிகள் வரை அதிகபட்சமாக சென்செக்ஸ் சரிந்தது. இன்றும் 1,470 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிவை சந்தித்தது.
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து இருப்பதே பங்குச்சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும். கடந்த ஆண்டின் முதல் அலையை விட தற்போது மிக அதிகமாக நபர்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். இதனால் தமிழகம், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களில் படிப்படியாக கட்டுப்பாடுகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், பொருளாதார நடவடிக்கை பாதிக்கப்படும் என்பதால் பங்குச்சந்தையில் பதற்றம் நிலவுகிறது.
இதன் காரணமாக, இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறுகின்றன. தவிர, கடந்த ஆண்டு கிடைத்த லாபத்தை வெளியே எடுக்கும் போக்கும் முதலீட்டாளர்களிடம் இருப்பதால் சந்தையில் சரிவு தொடர்கிறது.
ஆரம்பத்தில் அதிக சரிவு இருந்தாலும், இன்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 882 புள்ளிகள் வரை சரிந்து முடிந்தன. அதேபோல டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிந்தது. 52 பைசா சரிந்து ஒரு டாலர் 74.87 ரூபாயாக இருந்தது.
பார்மா துறை பங்குகளை தவிர மற்ற அனைத்து பங்குகளும் சரிந்து முடிவடைந்தன. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியில் பார்மா குறியிடு மட்டும் 0.17 சதவீத அளவுக்கு உயர்ந்தது. மற்ற அனைத்து குறியீடுகளும் சரிந்து முடிந்தன. சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.6 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
நிஃப்டியில் உள்ள 50 பங்குகளில் பிரிட்டானியா, டாக்டர் ரெட்டீஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் சிப்லா ஆகிய பங்குகள் மட்டுமே உயர்ந்தது முடிவடைந்தது. அதேபோல வங்கி மற்றும் நிதிச்சேவை சார்ந்த பங்குகள் கடுமையாக சரிந்தன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News